சுடச்சுட

  

  உள்கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 24th April 2017 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உள்கட்டமைப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
  தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய கொள்கைக் குழு எனப்படும் "நீதி ஆயோக்' அமைப்பு நிர்வாகக் குழுவின் 3-ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நீதி ஆயோக் அமைப்பின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
  நீதி ஆயோக் அமைப்பு 15 ஆண்டு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும், 7 ஆண்டு இடைக்காலத் திட்டத்தின் அடிப்படையிலும், 3 ஆண்டு குறுகிய காலத் திட்டத்தின் அடிப்படையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த 3 திட்டங்களாலும், மாநிலங்கள் பெரிதும் பலனடையும். புதிய இந்தியாவை நோக்கிய நமது எண்ணம், கூட்டு முயற்சிகள், அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பினாலேயே சாத்தியமாகும்.
  மாறி வரும் உலக நிகழ்வுகளுக்கு நமது நாட்டை தயார்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க நாம் அனைவரும் (டீம் இந்தியா) இங்கு கூடியிருக்கிறோம். நமது நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022-ஆம் ஆண்டில் இந்தியாவை மேலும் மேம்படுத்துவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இந்த இலக்குகளை அடைய நாட்டை எப்படி முன்னோக்கி விரைந்து கொண்டு செல்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
  முதல்வர்கள் தங்களது மாநிலங்களின் பட்ஜெட்டுகள் அல்லது அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற நீதி ஆயோக் அமைப்புக்கு வர வேண்டியதில்லை. நீதி ஆயோக் அமைப்பு, அரசின் கருத்துகளை சார்ந்திராமல், ஏராளமான சிறப்பு நிபுணர்கள், வல்லுநர்கள், இளம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. வளர்ச்சி தொடர்பான கொள்கையை வகுப்பதற்கு, மாநில அரசுகளும் தங்களது பங்களிப்பை அளிக்க முடியும்.
  2014-2015-ஆம் ஆண்டு, 2016-17-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த நிதியின் அளவு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 40 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்துவிட்டது.
  உள்கட்டமைப்பு மோசமாக இருப்பது, நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாநில அரசுகள் தங்களது மூலதனத்தை செலவிடுவதையும், உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதையும் விரைவுபடுத்த வேண்டும். சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், ரயில் பாதை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு அதிக நிதியை மாநிலங்கள் செலவிட வேண்டும்.
  மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தொடர்ந்து விவாதம் நடத்தப்பட வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சட்டமானது (ஜிஎஸ்டி), "ஒரே தேசம், ஒரே லட்சியம், ஒரே உறுதி' ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்றார் மோடி.

  ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்த தயாராகுங்கள்

  கூட்டத்தில் நிறைவுரை ஆற்றியபோது, ஜுலை மாதம் 1-ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில், சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை தாமதமின்றி மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
  ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை மாநிலங்கள் தாமதமின்றி எடுக்க வேண்டும். மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் ஆகியவை 2022-ஆம் ஆண்டுக்கான தங்களது லட்சியங்களை முடிவு செய்து, அதை சாதிக்க துரிதகதியில் பணியாற்ற வேண்டும்.
  மத்திய அரசின் இணையதளத்தை மாநிலங்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்யவும், சேவைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது, ஊழலை குறைக்கவும், அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும். இதேபோல், பீம் செயலி, ஆதார் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாலும், மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சேமிக்க முடியும்.
  நிதியாண்டுக் காலத்தை ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலமாக மாற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இதுதொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai