சுடச்சுட

  

  தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தில்லி கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 24th April 2017 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  palaniswamy

  தில்லியில் தொடர் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டத்தில் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
  தில்லியில் மத்திய கொள்கைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக விவசாயிகள் தில்லியில் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம், நீட் தேர்வு முறையால் பாதிக்கப்படும் தமிழக மாணவர்களின் நிலை, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டு அவற்றில் கவனம் செலுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியது வருமாறு: 
  தொலைநோக்கு ஆவணம்: தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கேற்ப கட்டமைப்பு அடிப்படையிலான நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ், 17 இலக்குகள் மற்றும் 169 குறிக்கோள்களை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை, தமிழக அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. நீடித்த வளர்ச்சிகளின் இலக்குகளை அடைவதில் கண்டறியப்பட்ட இடைவெளிகளை நிரப்புவதற்கு தேவைப்படும் திட்டங்களுக்கு மத்திய கொள்கைக் குழுவும் மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  விவசாயிகளின் நிலை: வருங்காலங்களில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாக இருப்பதால், அதற்குத் தேவைப்படும் உணவை வேறு எந்த நாடும் உற்பத்தி செய்ய இயலாது. எனவே, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதே நாட்டின் முக்கியமான பொருளாதார உத்தியாக இருக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் பிரதிநிதிகள் தில்லியில் முகாமிட்டு அவர்களுடைய குறைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களது நியாயமான குறைகளுக்கு, மத்திய அரசு செவி சாய்க்க வேண்டியது அவசியமானது.
  பாசனம் மற்றும் குடிநீர் வழங்கலுக்கான நீர்த் தேவையை நிறைவு செய்ய மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகளை, குறிப்பாக, காவிரி ஆற்றை தமிழகம் சார்ந்துள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
  நதிகள் இணைப்பு அவசியம்: நம் நாட்டில் உள்ள நீர் வளங்களை சரியான மற்றும் சமமான முறையில் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வதற்கான நீண்ட காலத் தீர்வு என்பது ஆறுகளை இணைப்பதுதான். மாநிலங்களுக்கிடையேயான அனைத்து ஆறுகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம், நாட்டின் நீர் வள ஆதாரங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படும்.
  விவசாயிகள் பயிர் திட்டம்: விவசாயக் காப்பீடு தொடர்பாக தேவையான தகவல் அளிக்கப்பட்டுள்ளதால், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு 2016-17-ஆம் ஆண்டிற்கான சம்பா பருவ காலத்திற்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
  மீனவர் பிரச்னை: இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 133 பேரின் படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நீண்டகாலப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்.
  சுகாதார பாதுகாப்பு: அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு எனும் நோக்கத்தை தமிழகம் எட்டுவதற்கு தற்போது செயல்பாட்டிலுள்ள பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தி, எங்கெல்லாம் பற்றாக்குறை உள்ளதோ, அவற்றை மட்டும் தனியார் மூலம் நிவர்த்தி செய்வது சாலச் சிறந்தது என உறுதியாக நம்புகிறோம்.
  வரிகள் பிரச்னை: 14-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. ஏனெனில், மாநிலங்களுக்கிடையேயான பங்கீட்டில், தமிழகத்தின் பங்கு ஏறத்தாழ 20 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. 
  ஜிஎஸ்டி அமலாக்கம்: சரக்கு மற்றும் சேவை வரியின் அறிமுகம், தமிழகம் போன்ற நிகர ஏற்றுமதி மற்றும் உற்பத்தி மிகு மாநிலத்திற்கு, நிரந்தர வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மேலும், மாநிலத்தின் நிதி நிலையையும் வெகுவாகப் பாதிக்கும் என தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அரசியலமைப்பின் 101-ஆவது திருத்தத்திற்குப் பின்னர் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய சரக்கு மற்றும் சேவை வரி குழுவினரோடு தமிழக அரசு தொடர்ந்து முனைப்பாக பங்கேற்று வருகிறது என்றார் முதல்வர் பழனிசாமி.
  இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்து கொண்டார். பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் அளித்துள்ள கோரிக்கை மனுவையும் அளித்தேன். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்துக்கு திரும்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்' என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai