சுடச்சுட

  

  தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண்ணுக்கு அவமதிப்பா? தொல்லியல் துறை, சுற்றுலா அமைச்சகம் மறுப்பு

  By புதுதில்லி  |   Published on : 24th April 2017 07:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  taj

  உத்தரப் பிரதேச மாநிலம்,ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் வெளிநாட்டு மாடல் அழகி தலையில் போர்த்தியிருந்த "ராம் நாமம்' என பெயர் பொறித்த கைக்குட்டையை அகற்றுமாறு கூறி அவரை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இந்திய தொல்லியல் துறை, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

  தில்லியில் ஏப்ரல் 12 முதல் 22-ஆம் தேதி வரை சர்வதேச மாடல் அழகிகளின் போட்டி நடைபெற்றது. இதையொட்டி, இந்தியா வந்திருந்தவர்களில் 34 அழகிகள் தாஜ்மஹாலுக்கு அண்மையில் சுற்றுப் பயணம் செய்தனர். அதில் ஒரு பெண் கடும் கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில், தனது தலையில் கைக்குட்டையை கட்டியிருந்தார். அந்தக்  கைக்குட்டையில் ராம் நாமம் என குறிப்பிட்டிருந்தது.

  இதையடுத்து, தாஜ்மஹாலுக்குள் நுழைந்த அந்தப் பெண், அவரது தலையில் கட்டியிருந்த கைக்குட்டையை அகற்றும்படி நிர்பந்திக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக அந்தப்  பெண்ணை அங்குள்ள ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேள்விப்பட்டவுடன் விசாரணை நடத்த இந்திய தொல்லியல் துறை, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், தாஜ்மஹால் சமாதி அமைந்த பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள செல்லிடப்பேசி, கேமராக்கள், திரவப் பொருள்கள் போன்றவை மட்டும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் எவரிடமும் அவர் பயன்படுத்தும் கைக்குட்டை, அதில் இடம் பெற்றுள்ள எழுத்துகள் கொண்ட வரிகள் தொடர்பாக எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றார்.

  இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

  அதன்பேரில் சிஐஎஸ்எஃப் கமாண்டன்ட் அளித்துள்ள அறிக்கையில், தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டு மாடல் பெண்கள் குழுவினரில் ஒருவர் தலையில் அணிந்திருந்த கைக்குட்டையை அகற்றி அதை ஒரு நபரிடம் அளித்துள்ள காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், அந்த நபர் தாஜ்மஹால் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை ஊழியரோ அல்லது சிஐஎஸ்எஃப் காவலரோ கிடையாது. அந்த மாடல் அழகிகளை அழைத்து வந்த வழிகாட்டியாகவோ வேறு நபராகவோ இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் சிஐஎஸ்எஃப் அல்லது இந்திய தொல்லியல் துறைக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று இரு துறைகளும் மறுப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai