சுடச்சுட

  
  delhi-election

  தில்லி கேசவபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காத்திருக்கும் பொதுமக்கள்.

  தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தில்லி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குகள் வரும் 26-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
  தெற்கு, வடக்கு, கிழக்கு என தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளின் வரம்புகளுக்கு உள்பட்ட 270 வார்டுகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சமாஜவாதி வேட்பாளர்கள் இருவரின் மரணம் காரணமாக, கிழக்கு தில்லியின் மெளஜ்பூர் மற்றும் வடக்கு தில்லியின் சராய் பிபல் ஆகிய வார்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  மெளஜ்பூரில் மே 14-ஆம் தேதியும், சராய் பிபலில் மே 21-ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் தில்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
  இந்தத் தேர்தலில், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி, மாநகராட்சிகளை ஆட்சி செய்து வந்த பாஜக, காங்கிரஸ் கட்சி, ஸ்வராஜ் இந்தியா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து 2,886 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது. புதிதாக களம் கண்டுள்ள ஸ்வராஜ் இந்தியா கட்சியும் கணிசமான வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பலனடையப் போகும் கட்சி எது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
  இந்தத் தேர்தலில் 59 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 1 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 206 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். 1,464 வாக்குச்சாவடிகள் "பதற்றமானவை' என்றும் 197 வார்டுகள் "மிகவும் பதற்றமானவை' என்றும் தேர்தல் ஆணையம் கண்டறிந்தது. இந்த வார்டுகளின் வெளிப்பகுதியில் மத்திய துணை ராணுவத்தினர், உள்பகுதியில் உள்ளூர் காவல் துறையினர் ஆயுதம் ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.
  மாநகராட்சித் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில காவல் துறைகளில் பணியாற்றி வரும் 56,256 காவலர்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
  வாக்குப்பதிவு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 10 மணி வரையிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. கிழக்கு தில்லியில் 4 சதவீதம், வடக்கு தில்லியில் 5 சதவீதம், தெற்கு தில்லியில் 4 சதவீதம் என மொத்தம் சராசரியாக 4.26 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால், பிற்பகலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கத் தொடங்கியது. பிற்பகல் 2 மணி அளவில் 33 சதவீதமும், மாலை 4 மணி அளவில் 38.88 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
  இந்தத் தேர்தலில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன், மத்திய அமைச்சர்கள் விஜய் கோயல், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் வாக்களித்தனர்.
  தில்லி மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து தில்லி தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.கே. ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி மாநகராட்சித் தேர்தல் மொத்தத்தில் அமைதியாக நடைபெற்று முடிந்தது. மொத்தம் 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. ஆனால், அவை உடனடியாக சரி செய்யப்பட்டன.
  சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பதிவான வாக்குகள் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 26) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
  கடந்த 2012-இல் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 55 சதவீத வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai