சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி)தலைவருமான மெஹபூபா முஃப்தி, பிரதமர் மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார்.
  இந்தச் சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து பிரதமருடன் அவர் விவாதிப்பார் என்று தெரிகிறது. பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலில் அதிக அளவு வன்முறைச் சம்பவங்களுடன் குறைந்த அளவு வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தத் தேர்தலில், பிடிபி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனிடையே, மாநிலத்தில் கல்லெறியும் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துவிட்டன.
  காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தாலும், கல்லெறியும் சம்பவங்களை எதிர்கொள்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே சிறு பூசல் ஏற்பட்டுள்ளது.
  இந்தச் சூழலில், தில்லியில் பிரதமர் மோடியை மெஹபூபா முஃப்தி திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதும் நிலையைப் போக்க, மத்திய அரசு சார்பில் திட்டங்களை தொடங்குமாறு பிரதமரிடம் மெஹபூபா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  கடந்த சில தினங்களுக்கு முன் மாநில பாஜக அமைச்சர் சந்தர் பிரகாஷ் கங்கா கூறுகையில், ""கல்லெறிபவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளால் பதில் சொல்ல வேண்டும்'' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
  அவரது பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த பிடிபி மூத்த தலைவர் பீர்சதா மன்சூர், ""இவ்வாறு பேசுவது மாநிலத்தில் புதிதாக வன்முறை வெடிப்பதற்கு வழிவகுக்கும்'' என்றார். இதனால் பாஜக-பிடிபி தலைவர்களிடையே அதிருப்தி நிலவியது. பின்னர், பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் தலையிட்டு இரு தரப்பு தலைவர்களையும் சமாதானப்படுத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai