சுடச்சுட

  

  பெய்ஜிங் நகருக்கு மும்பை என பெயர் மாற்றலாமா? சீனாவுக்கு அருணாசல் தலைவர்கள் கேள்வி

  By DIN  |   Published on : 24th April 2017 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீனத் தலைநகர் பெய்ஜிங்கை மும்பை என பெயர் மாற்றி இந்தியாவுடன் இணைத்துவிடலாமா? என்று அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  இந்தியாவின் ஒரு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகள் தங்களுடையது என்று உரிமை கொண்டாடி வரும் சீனா, 6 பகுதிகளுக்கு புதிய பெயரையும் அண்மையில் சூட்டியது.
  இதற்கு அருணாசலப் பிரதேசத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கட்சி வேறுபாடுகள் இன்றி அம்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் சீனாவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் தாபிர் காவ் கூறியதாவது:
  கடந்த 1959-ஆம் ஆண்டு திபெத்தை சீனா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. இப்போது அருணாசலப் பிரதேசத்தையும் கைப்பற்றிவிடத் துடிக்கிறது.
  அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை திபெத் புத்த மதத் துறவி தலாய் லாமா பலமுறை சர்வதேச அரங்கில் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு சீனாவுடன் சர்வதேச எல்லை கிடையாது. திபெத்துடன் மட்டும்தான் எல்லை உள்ளது. இந்த நிலையில் சீனா வேண்டுமென்றே இந்தியப் பிராந்தியத்துக்கு உரிமை கொண்டாடுவது மோசமான நடவடிக்கையாகும் என்றார் அவர்.
  இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்க அருணாசலப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர் சகுந்தலா டோலி சாம்லின் மறுத்துவிட்டார்.
  "மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை கையாண்டு வருகிறது. இதில் நாங்கள் கருத்துக் கூறுவதற்கு எதுவும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.
  முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நபம் துகி கூறுகையில், "இந்தியப் பகுதிக்கு சீனா உரிமை கோருவதில் எவ்வித நியாயமும் இல்லை. அருணாசலப் பிரசேதம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தை மத்திய அரசு தீவிரமாகக் கருத்தில் கொண்டு, விரைவில் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்றார்.
  அருணாசலப் பிரதேச தொழில் வர்த்தக சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டெக்சி லாலா இது கூறித்து கூறியதாவது:
  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிக்கு சீனா பெயர் சூட்டுவது மோசமான செயல்.
  சீனத் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு மும்பை என பெயர் சூட்டி இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று உரிமை கோரினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? சீனாவின் செயல்பாடுகளால் சர்வதேச அரங்கில் அவர்களுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai