சுடச்சுட

  
  farmers07

  தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

  தில்லியில் கடந்த 41 நாள்களாக அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் குழுவினர் நடத்தி வந்த போராட்டம் வரும் மே 25-ஆம் தேதி வரை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் குழுவினரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை காலையில் நேரில் சந்தித்தார். மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அரசின் தில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
  அப்போது விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளையும் நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளை பொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பி.அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.
  இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைள் குறித்து பிரதமரிடம் பேசி உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார். மேலும், விவசாயிகள் முன்வைத்துள்ள பெரும்பான்மையான கோரிக்கைகள் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தவை என்பதை சுட்டிக்காட்டிய முதல்வர் பழனிசாமி, வறட்சி, புயல் சீற்றம் போன்றவற்றால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.
  இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற மத்திய கொள்கைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது, விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் போராடும் அவலம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி பேசினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அய்யாக்கண்ணு குழுவினர் எழுதிய மனுவை, அவர்களின் சார்பில் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் நேரில் அளித்து அவற்றை நிறைவேற்ற பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
  இத்தகவல் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லி இளைஞர் மன்றம் சார்பில் இந்தியா கேட் முதல் ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்தப்பட்டது.
  இதன் பிறகு செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது: தில்லியில் கடந்த 41 நாள்களாக நிலவிய கடும் குளிர், மழை, வெயில், கொசுக்கடி போன்றவற்றை பொருள்படுத்தாமல் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நாங்கள் போராடினோம். எங்கள் போராட்டத்துக்கு ஆரம்பம் முதலே தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, தமாகா, இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும், வட மாநிலங்களில் உள்ள விவசாய அமைப்புகளும் ஆதரவு அளித்தன. தில்லியில் போராட்டம் நடத்தி வந்த எங்களுக்கு உறுதுணையாக தில்லிவாழ் இளைஞர்கள், தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நிதி திரட்டி உண்ண உணவும் குடிநீரும் வழங்கி உதவினர். ஊடகங்களும் தொடர்ச்சியாக எங்கள் போராட்ட செய்திகளை வெளியிட்டதால் மத்திய அரசின் கவனத்தை நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் ஈர்க்க எங்களால் முடிந்தது.
  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க மத்திய நிதித் துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். இதேபோல, பிரதமரைச் சந்தித்துப் பேசி எங்கள் கோரிக்கைகள் நிறைவேற ஆதரவாக இருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமியும் கூறினார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் எங்களைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஆதரவாக வரும் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இவர்களின் உறுதிமொழியையும் அறிவுறுத்தலையும் ஏற்று எங்களின் 41 நாள்கள் போராட்டத்தை தாற்காலிகமாக வரும் மே 25-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கிறோம் என்றார் அய்யாக்கண்ணு.
  இதைத் தொடர்ந்து, தமிழகம் திரும்பும் தமிழக விவசாயிகளுக்கு தில்லியில் இருந்து சென்னைக்குப் புறப்படும் ரயிலில் பயணச்சீட்டு ஏற்பாட்டையும் தனி பெட்டியை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கவும் தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai