சுடச்சுட

  
  paswan

  ''நியாய விலைக் கடைகளில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான மானியத்தை மத்திய அரசே வழங்கி வருகிறது'' என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெளிவுபடுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக, தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

  உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நியாய விலைக் கடைகளில் கோதுமை மற்றும் அரிசி கிலோ ஒன்றுக்கு முறையே ரூ. 2 மற்றும் ரூ. 3 என்ற விலையில் வழங்கப்படுகிறது.

  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் இந்த உணவு தானியங்களுக்கான மொத்த மானியத்தையும் மத்திய அரசு வழங்கிவரும் நிலையில், இதற்கான நற்பெயரை மாநில அரசுகள் பெற்று வருகின்றன.
  உண்மையில் கோதுமைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 22-ம், அரிசிக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 29.64-ம் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

  தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும், நியாய விலைக் கடைகளில் அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்குண்டான சிறு அளவிலான மானியச் செலவை மட்டுமே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கின்றன.

  மற்றபடி, வேறு எந்த மாநில அரசுகளும் உணவு தானியங்களுக்காக மானியங்களை வழங்குவதில்லை.

  உணவு தானியங்களுக்காக மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்த விவரங்களை நியாய விலைக் கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

  இதுதொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தான் உணவு தானியங்களை கிலோவுக்கு ரூ. 2 அல்லது ரூ. 3 விலையில் வழங்குவதாக ஏழை, எளிய மக்கள் கருதுகின்றனர்.

  உண்மையில், மத்திய அரசு தான் அதை வழங்கி வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
  உணவு தானியங்களுக்கான மானியமாக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai