சுடச்சுட

    

    ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தவே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

    By DIN  |   Published on : 25th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவே, ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    நாடு முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் தனிநபர் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1 முதல் ரூ.3 வரையிலான விலையில் தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    இதனிடையே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு, அஸ்ஸாம், மேகாலயம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை தவிர, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
    இந்நிலையில், ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தொடுக்கப்பட்டது. இந்த பொது நல மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கீதா மித்தல் (பொறுப்பு), நீதிபதி அனு மல்ஹோத்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் சஞ்சய் ஜெயின், அரசு வழக்குரைஞர் பகவான் ஸ்வரூப் சுக்லா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
    பொது விநியோகத் திட்ட முறையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மானியமுறையில் அளிக்கப்படும் உணவு தானியங்கள், ஏழை மக்களை சென்றடைவதில்லை. எனவே, ஏழைகளுக்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவே, ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    பொது விநியோகத் திட்ட நலன்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, இந்த முறையின்கீழ் 2.33 கோடி போலி குடும்ப அட்டைகள் பயன்பெற்று வந்தது கண்டறியப்பட்டது. ஆதார் அட்டையை இதுவரையிலும் பெறாத மக்களுக்கு, அதை பெறுவதற்கு ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வலியுறுத்தினர்.
    ஆதார் இல்லாமல் மானிய விலையில் உணவு தானியங்களை அளிக்க வேண்டும் என்று தில்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, பொதுநல மனு குறித்து பதில் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று தில்லி அரசு தனது பதிலை தாக்கல் செய்ய மே மாதம் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையும் மே மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் தில்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai