சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் தேர்தல்: சோனியாவுடன் டி.ராஜா ஆலோசனை

  By DIN  |   Published on : 25th April 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  raja

  குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா விவாதித்தார்.
  தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு தனது வேட்பாளரை அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இதற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியே காரணமாகும்.
  இந்தச் சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருடன் அவர் நடத்திய சந்திப்புகள் அதில் அடங்கும்.
  இந்நிலையில், சோனியா காந்தியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த இந்தச் சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்புடைய ஒரு வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. தவிர, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து சோனியாவும், டி.ராஜாவும் விவாதித்ததாகவும், அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் மக்கள் மீது அதன் தாக்கம் ஆகியவை குறித்து அவர்கள் கவலை தெரிவித்ததாகவும் தெரிகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசித்த பிறகு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
  முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் தில்லியில் வியாழக்கிழமை கூடி விவாதித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai