சுடச்சுட

    

    கூடங்குளம் அணு உலை அனுமதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 25th April 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    கூடங்குளத்தில் புதிதாக நான்கு அணு உலைகளை அமைப்பதற்கான கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2012-ஆம் ஆண்டு வழங்கியது. இதையடுத்து, இந்த அனுமதி தொடர்பாக தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கூடங்குளத்தில் புதிதாக நிறுவப்படவுள்ள 3 முதல் 6 வரையிலான யூனிட்டுகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்துச் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 'பூவுலகின் நண்பர்கள்' சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஜி. சுந்தர்ராஜன் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, 'கூடங்குளத்தில் முதலாவது, இரண்டாவது யூனிட்டுகள் தொடர்பாக மட்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 முதல் 6 வரையிலான யூனிட்டுகள் தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்தப் புதிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும். கூடங்குளத்தில் புதிதாக நிறுவப்படவுள்ள 3 முதல் 6 வரையிலான யூனிட்டுகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை (இஐஏ) பரிந்துரைத்த என்ஜீனியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு முறையான அங்கீகாரம் கிடையாது. மேலும், சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக நிறுவப்படவுள்ள யூனிட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்துச் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
    அவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய அணுமின் கழகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai