சுடச்சுட

  

  சட்டவிரோத சுரங்க ஊழல்: கோவா முன்னாள் முதல்வருக்கு இடைக்கால முன்ஜாமீன்

  By DIN  |   Published on : 25th April 2017 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DIGAMBAR-KAMAT

  சட்டவிரோத சுரங்க ஊழல் தொடர்பான வழக்கில், கோவா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திகம்பர் காமத்துக்கு பனாஜி நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் அளித்துள்ளது.
  கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டவிரோத சுரங்க ஊழல் தொடர்பாக அந்த மாநில குற்றப்பிரிவு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காமத் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2013-ஆம் ஆண்டில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அதையடுத்து, காமத்திடம் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்முறையாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியது.
  இதையடுத்து, கடந்த 18-ஆம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று காமத்துக்கு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்தது. ஆனால், அவர் அழைப்பாணையை ஏற்று நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, காமத்துக்கு 2-ஆவது முறையாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியது. அதில் திங்கள்கிழமை (ஏப்.24) பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
  இதனால், முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், பனாஜியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் காமத் சார்பில் முன்ஜாமீன் கேட்டு திங்கள்கிழமை காலை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, ரூ.1 லட்சம் உறுதித் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், காமத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் அளித்தது. இந்த மனு மீதான அடுத்த விசாரணையையும் மே மாதம் 2-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
  இதைத் தொடர்ந்து, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு முன்பு காமத் திங்கள்கிழமை பிற்பகலில் நேரில் ஆஜரானார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai