சுடச்சுட

  

  சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

  By DIN  |   Published on : 25th April 2017 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sathiskar

  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் காயமடைந்து, மருத்துவச் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்படும் சிஆர்பிப்எஃப் வீரர்கள்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎஃப்) படையைச் சேர்ந்த வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டனர்.
  நக்ஸல் தீவிரவாதிகளின் வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான தெற்கு பஸ்தர் பிராந்தியத்துக்கு உள்பட்ட சுக்மா மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.
  இதுதொடர்பாக, சிஆர்பிஎஃப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, சிஆர்பிஎஃப் படையின் 74-ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 99 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். திங்கள்கிழமை மதியம் அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நக்ஸல் தீவிரவாதிகள் ஏராளமானோர், அவர்களைச் சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
  இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்த வீரர்களை மீட்டு ஹெலிகாப்டர்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிலரும், மருத்துவமனையில் சிலரும் இறந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்தது. இன்னும் சில வீரர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. தேடும் பணி முடிவடைந்த பிறகே, உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரும் என்றார் அவர்.
  நிகழாண்டில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும்.
  300 நக்ஸல்கள் தாக்குதல்: ஒரே நேரத்தில் பெண்கள் உள்பட கருப்புச் சீருடையில் வந்த 300-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் சுற்றி வளைத்து அதிநவீன துப்பாக்கிகளால் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, காயமடைந்த வீரர் ஒருவர் கூறினார்.

  பிரணாப் முகர்ஜி கண்டனம்
  சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  சோனியா, ராகுல் கண்டனம்
  சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  ''இதுபோன்ற தாக்குதல்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒருபோதும் தடுத்துவிடாது. பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடுமையான, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

  முதல்வர் அவசர ஆலோசனை
  தில்லியில் இருந்த முதல்வர் ரமண் சிங், தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக ராய்ப்பூர் திரும்பினார். ராய்ப்பூரில் முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், காயமடைந்த வீரர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
  முன்னதாக, சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நக்ஸல்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியது மிகுந்த துயரத்தை அளிப்பதாக ரமண் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  சிஆர்பிஎஃப் கமாண்டர் பலி
  சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் கமாண்டர் ரகுவீர் சிங் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது..
  நக்ஸல்கள் சாவு
  சிஆர்பிஎஃப் படை வீரர்கள் கொடுத்த பதிலடியில் கணிசமான எண்ணிக்கையில் நக்ஸல் தீவிரவாதிகளும் உயிரிழந்தனர் என்று சிஆர்பிஎஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வீரர்களின் தியாகம் வீண் போகாது: பிரதமர் மோடி
  பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. நமது வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பிரதமர் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  மோடி-ராஜ்நாத் சிங் ஆலோசனை
  பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை இரவு அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழல் குறித்தும், தாக்குதலுக்குப் பிறகு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இந்நிலையில், ராஜ்நாத் சிங், செவ்வாய்க்கிழமை ராய்ப்பூர் செல்லவுள்ளார்.

  அக்கறையில்லாத அரசு: மார்க்சிஸ்ட்
  உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தனது சுட்டுரைப் பக்கத்தில், ''இயக்குநர் இல்லாமல் சிஆர்பிஎஃப் படை இயங்கி வருகிறது; இதிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்பில் அக்கறையின்றி மத்திய அரசு இருப்பது தெளிவாகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai