சுடச்சுட

  

  சிறார் நீதிச் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 25th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kailesh

  கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு (இடது) பி.சி.சந்திரா விருதை வழங்கும் பிரபல வங்கமொழி எழுத்தாளர் சீர்ஷேந்து முகோபாத்யாய (வலது).

  குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் சிறார் நீதிச் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல நகை விற்பனையகமான பி.சி.சந்திரா குழுமத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரபல சமூக சேவகர் ஒருவருக்கு 'பி.சி.சந்திரா விருது' அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது, கைலாஷ் சத்யார்த்திக்கு கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அளிக்கப்பட்டது.
  அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சிறார்களின் குற்ற விகிதம் அதிகரித்து வருவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து சத்யார்த்தி கூறியதாவது:
  சிறார் நீதிச் சட்டத்தில் கடுமையான ஷரத்துகள் உள்ளன. அவற்றைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். அந்த ஷரத்துகளை நம்மால் அமல்படுத்த முடிந்தால், குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடக் கூடிய சூழ்நிலை மாறும். பாதுகாப்பும் அரவணைப்பும் தேவைப்படும் அனைத்துச் சிறார்கள் மீதும் நாம் அக்கறை செலுத்தினால், சூழ்நிலை மாறும். 
  குழந்தைகளுக்கான கல்வி உரிமையை நம்மால் உறுதிப்படுத்த முடிந்தால், மதிய உணவுத் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களை உரிய முறையில் அமல்படுத்த முடிந்தால் அதன் பின் குழந்தைகள் அடிமைகளாகவும், பாலியல் தொழிலாளர்களாகவும் மாறும் நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள். மேலும், வன்முறைச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள்.
  உலகெங்கிலும் குழந்தைத் தொழிலாளர் முறையையும் கொத்தடிமைகளாக குழந்தைகள் நடத்தப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவர நாடுகள் அனைத்தும் கூட்டுப் பொறுப்பேற்று செயல்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையையும், அடிமைத்தனத்தையும் ஒழிப்பதற்கு மிக உயர்ந்த நிலையிலான தலையீடு அவசியமாகிறது.
  குழந்தைகளது துன்பங்களின் மீது நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க முடியாது. உலகெங்கிலும் தற்போது 23 கோடி குழந்தைகள், போர் நடைபெறும் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உயர் அதிகாரக் குழு ஒன்றை ஐ.நா. அமைக்க வேண்டும் என்றார் அவர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai