சுடச்சுட

  

  ஜாதவ் விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை: பாகிஸ்தான் தூதர் விளக்கம்

  By DIN  |   Published on : 25th April 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மறுக்கப்படுவது என்பது இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாக அமையாது என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் விளக்கமளித்துள்ளார்.
  பாகிஸ்தானுக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட்டதாக முன்னாள் இந்தியக் கடற்படை வீரரான குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
  இதனிடையே, குல்பூஷண் ஜாதவுக்கு இந்தியத் தூதரகத்தின் உதவி கிடைக்க அனுமதி வழங்குமாறு பாகிஸ்தானிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை.
  இவ்வாறு தூதரக உதவிக்கு அனுமதி மறுப்பது, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாக அமையும் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
  பாகிஸ்தான் கருத்து: இந்நிலையில், இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
  குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் நாச வேலைகளை நிகழ்த்துவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. பலூசிஸ்தானில் அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்திருக்கிறார்கள். மேலும், குல்பூஷண் ஜாதவ், பல முறை பாகிஸ்தானுக்கு போலி கடவுச்சீட்டுடன் பயணம் செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
  ஒருவருக்கு தூதரக உதவி கிடைக்க அனுமதிப்பது என்பது சம்பந்தப்பட்ட நபர் செய்த குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவதாகும். மாறாக, கைது செய்யப்படும் இந்தியர்கள் அனைவருக்கும் தூதரக உதவி வழங்கப்பட வேண்டிய கட்டாயமில்லை.
  அதன் அடிப்படையிலேயே, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக, இரு நாட்டு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுவதாக கருத முடியாது.
  தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் குல்பூஷண் ஜாதவ், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அங்கும் அவரது தண்டனை உறுதி செய்யப்படும்பட்சத்தில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் அவரால் கருணை மனு தாக்கல் செய்ய முடியும் என்றார் அப்துல் பாசித்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai