சுடச்சுட

    

    தில்லியில் டி.டி.வி. தினகரனிடம் மூன்றாவது நாளாக விசாரணை

    By DIN  |   Published on : 25th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dinakaran

    தில்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 3-ஆம் நாளாக  திங்கள்கிழமை ஆஜரான டி.டி.வி. தினகரன்.

    தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை வி.கே.சசிகலா தரப்புக்கு சாதகமாக பெற ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக தில்லி சாணக்கியபுரி காவல் நிலைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் டி.டி.வி.தினகரனிடம் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் விசாரணை நடைபெற்றது. 
    இந்த விவகாரம் தொடர்பாக டி.டி.வி. தினகரன், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், தினகரனின் நண்பரும் பெங்களூருவைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் ஆகியோரிடம் சனிக்கிழமை 7 மணி நேரமும், ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. 
    இதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது. ஜனார்த்தனன், மல்லிகார்ஜுன் ஆகியோர் பிற்பகல் 2 மணிக்கும் தினகரன் மாலை 4 மணிக்கும் தில்லி காவல் துறை குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். மூவரிடமும் தில்லி காவல் துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் மதுர் வர்மா, உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் ஆகியோர் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
    இது குறித்து தில்லி காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் போது முதலில் தனக்கு சுகேஷ் சந்திரசேகரை தெரியாது என தெரிவித்த தினகரன், பின்னர் அவருடனான சந்திப்பை ஒப்புக் கொண்டுள்ளார். 
    மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பணம் தனக்கு தமிழகத்தில் வழங்கப்பட்டது என்றும், அதனை சாலை வழியாக தில்லிக்கு கொண்டு வந்ததாகவும், அதில் இரு விலை உயர்ந்த கார்களை வாங்கியதாகவும் சுகேஷ் சந்திரசேகர் ஒப்புக் கொண்டுள்ளார். கொச்சியில் உள்ள சுகேஷின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
    இதற்கிடையே, சுகேஷின் தோழியும், நடிகையுமான லீனா மரிய பாலிடமும் தில்லி காவல் துறையினர் கொச்சியில் விசாரணை நடத்தியுள்ளனர். தினகரனுக்கும், சுகேஷுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும் வகையில், அவர்களுடைய செல்லிடப்பேசி உரையாடல்கள், கட்செவி அஞ்சல் உரையாடல்கள் ஆகியவற்றைக் கண்டறியும் வகையில் இருவரின் செல்லிடப்பேசிகளும் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    இந்த விவகாரத்தில் சுகேஷுக்கு அளிக்கப்பட்ட பெருந்தொகைக்கான நோக்கம், தேர்தல் ஆணைய அதிகாரியின் உதவியை சுகேஷ் நாடியது ஆகியவற்றை ஆதாரத்துடன் தற்போது நிரூபிக்க வேண்டியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் 8-ஆவது பிரிவில் ஊழல் என்பது அரசு அதிகாரிக்கு தெரிந்தோ, தெரியாமலோ நடைபெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 
    இதனால், தற்போது பணியில் உள்ள அரசு அதிகாரிகளுடன் சுகேஷ் நேரடித் தொடர்பில் இருந்ததை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் எட்டு நாள் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai