சுடச்சுட

  

  தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: மத்திய அமைச்சருக்கு ஜாமீன்

  By DIN  |   Published on : 25th April 2017 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  UPENDRA-KUSHWAHA

  தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவுக்கு திங்கள்கிழமை ஜாமீன் கிடைத்தது.
  கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது பிகார் மாநிலம், கதிஹாரிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உபேந்திர குஷ்வாஹாவின் உருவப்படம் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
  இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது கதிஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை கதிஹார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
  வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, உபேந்திர குஷ்வாஹா நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, ரூ. 10,000-க்கான பிணையின்பேரில் அவருக்கு ஜாமீன் வழங்குவதாக கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் ரவிகுமார் அறிவித்தார்.
  முன்னதாக உபேந்திர குஷ்வாஹா நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, அவருடைய பாதுகாவலர்களையும், உடன் வந்த மற்றவர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் அனைவரும் வெளியேறினர்.
  பின்னர், அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் ரூ. 115 கோடி மதிப்பிலான சொத்தை பினாமி பெயரில் கையகப்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷில் குமார் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai