சுடச்சுட

  

  பிகார் சட்டப் பேரவையில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  பிகார் சட்டப் பேரவையில் மாநில வணிக வரித் துறை அமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவ், ஜிஎஸ்டி மசோதா மற்றும் மாநில வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
  அப்போது நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிஜேந்திர பிரசாத், 'குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது ஜிஎஸ்டி மசோதாவை கடுமையாக எதிர்த்தார்; பிரதமரான பிறகு அதனை ஆதரிக்கிறார்' என்றார்.
  அதேவேளையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரைப் பொருத்தவரை, ஜிஎஸ்டி மசோதாவுக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  இதைத்தொடர்ந்து, மாற்றுக் கட்சி உறுப்பினர்களும் ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக தங்களது கருத்துகளை முன்வைத்தனர். நிறைவாக குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா மற்றும் பிகார் வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா ஆகியவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai