சுடச்சுட

  

  பிரதமர் மோடியுடன் மெஹபூபா முஃப்தி சந்திப்பு: பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்த வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 25th April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி.

  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
  அப்போது பிரதமரிடம், காஷ்மீர் நிலவரம் மிகவும் மோசமாவதைத் தடுப்பதற்கு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே ஒரே வழி என்று அவர் வலியுறுத்தினார்.
  இந்தச் சந்திப்புக்கு பிறகு மெஹபூபா முஃப்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடைபிடித்த கொள்கையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். வாஜ்பாய் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் இருந்தபோதுதான், ஹுரியத் மாநாட்டு அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆதலால், வாஜ்பாய் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து நமது பணியை தொடங்க வேண்டியுள்ளது என்றேன். இதைக் கேட்ட பிரதமர் மோடி, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.
  பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அதேநேரத்தில், பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே ஒரே வழிமுறையாகும். ஏனெனில், எத்தனை காலம்தான் இப்படியே மோதிக் கொண்டிருப்பது? என்று மெஹபூபா முஃப்தி கூறினார்.
  இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மெஹபூபா முஃப்தி சந்தித்துப் பேசினார். அப்போது ராஜ்நாத் சிங்கிடம், மாநிலத்தில் ஸ்ரீநகர் மக்களவை இடைத் தேர்தலின்போது மூண்ட வன்முறை குறித்து விளக்கினார். மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலையை திரும்ப கொண்டு வர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
  இந்தச் சந்திப்பின்போது பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவும் உடனிருந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மெஹபூபா முஃப்தி பேசுகையில், 'முதலில் மாநிலத்தில் சகஜநிலையை ஏற்படுத்த வேண்டும். பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். அதன்பிறகு, மாநில நிலவரம் 2 அல்லது 3 மாதங்களில் மேம்பட்டு விடும்' என்றார்.
  ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, இதுகுறித்து மத்திய அரசுதான் கருத்து தெரிவிக்க முடியும் என்று மெஹபூபா பதிலளித்தார்.
  ராஜ்நாத் சிங் ஆய்வு: இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார். அப்போது அவரிடம், ஸ்ரீநகர் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்த விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது. எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai