சுடச்சுட

    

    போலி கடவுச் சீட்டு வழக்கு: சோட்டா ராஜன் உள்பட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

    By DIN  |   Published on : 25th April 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி கடவுச் சீட்டு வழக்கில் மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உள்பட நான்கு பேர் குற்றவாளிகள் என தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
    அவர்களுக்கான தண்டனை விவரங்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த வழக்கைப் பொருத்தவரை, சோட்டா ராஜனுக்கு ஆயுள் சிறை விதிக்கக் கூட சட்ட விதிகளில் இடம் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    மும்பையில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களிலும், குற்றச் சம்வபங்களிலும் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ராஜன், அவரை விட்டு பிரிந்து தனியாக சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
    அவரை போலீஸார் கைது செய்யத் திட்டமிட்டதைத் தொடர்ந்து போலி கடவுச் சீட்டு வாயிலாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். சோட்டா ராஜனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸார் தேடி வந்த நிலையில், இந்தோனேசியாவின் பாலித் தீவில் கடந்த 2015-இல் அவர் கைது செய்யப்பட்டார்.
    அப்போது மோகன் குமார் என்ற பெயரிலான போலி கடவுச் சீட்டை அவரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். சுமார் 70-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய சோட்டா ராஜன் மீது போலி கடவுச் சீட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
    அவர் போலியான பெயரில் கடவுச் சீட்டு பெறுவதற்கு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஜெயஸ்ரீ தத்தாத்ரேய ராஹத், தீபக் நட்வர்லால் ஷா, லலிதா லட்சுமணன் ஆகியோர் உறுதுணையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி வீரேந்தர் குமார் கோயல் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
    சோட்டா ராஜன் உள்பட நால்வரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அவர்களுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai