சுடச்சுட

  

  ஸ்திரத்தன்மையுடன் ஆட்சியைத் தொடர வேண்டும்: பாஜக முதல்வர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 25th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  ஸ்திரத்தன்மையுடன் ஆட்சியைத் தொடர்வதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள், பிரதமர் நரேந்திர மோடியை தனியே சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம், ஸ்திரத்தன்மையுடன் ஆட்சியை தொடர்வதுதான் பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அதேபோல், அரசு நலத் திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைவதையும், ஏழைகளுக்கு அதிகாரம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
  இந்தத் தகவலை பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது தெரிவித்தார். அதேநேரத்தில், காஷ்மீரில் நிலவும் பதற்றம், விரைவில் குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
  கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியபோது, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  இந்தச் சந்திப்பு சுமார் 4 மணி நேரத்துக்கு நீடித்தது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரும், 5 துணை முதல்வர்களும், கட்சியின் பொதுச் செயலாளர் ராம் லாலும் கலந்து கொண்டனர்.
  இதனிடையே, தேசிய உள்ளாட்சி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில், கிராமப்புறத்தில் மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வது, இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை பட்டியலிட்டிருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai