சுடச்சுட

  

  அரசு இணையதளங்களில் ஆதார் விவரங்கள் கசிவு: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

  By DIN  |   Published on : 26th April 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனிநபர் ஆதார் விவரங்களை இணையதளங்களில் வெளியிடுவது 3 ஆண்டு சிறை தண்டனைக்குரிய குற்றச் செயல் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அருணா சுந்தரராஜன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  நலத்திட்டங்கள் போன்றவைகளுக்காக அமைச்சகங்களாலும், மாநில நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகளாலும் சேகரிக்கப்பட்ட தனிநபர் அடையாளம் அல்லது தகவல்களும், ஆதார் எண்கள், வங்கி விவரம் போன்ற மிகவும் முக்கிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற தகவலை இணையதளத்தில் வெளியிடுவது ஆதார் சட்ட விதிகளை வெளிப்படையாக மீறும் செயலாகும். மேலும், 3 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
  இதேபோல், வங்கி விவரம் உள்ளிட்ட நிதி சம்பந்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதும், 2000-ஆம் ஆண்டைய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் செயலாகும். இதுபோன்ற செயலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டியிருக்கும்.
  ஆகையால், மாநில அரசு இணையதளங்களில் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசுகள் எடுக்க வேண்டும். ஏற்கெனவே இத்தகைய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தால், அதை உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் அருணா சுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
  ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓய்வூதியம் பெறும் லட்சக்கணக்கான மக்களின் ஆதார் விவரங்கள் அரசு இணையதளங்கள் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகியிருந்தன. அதில் ஆதார் எண், செல்லிடப் பேசி எண்கள், வங்கி விவரங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.
  இதேபோல், சண்டீகரில் பொது விநியோகத் துறையின் இணையதளத்தில் பொதுவிநியோக திட்ட பயனாளிகளின் ஆதார் விவரங்கள் வெளியாகியிருந்ததாக செய்திகள் வெளியாகின.
  முன்னதாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விவரங்கள் கசிந்தன. இதுதொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அளித்த புகாரையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  இந்த சூழ்நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai