சுடச்சுட

  

  ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு வலைவீசுகிறது பாஜக

  By புதுதில்லி  |   Published on : 26th April 2017 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், உயர் பதவிகள் தருவதாகவும் ஆசைகாட்டி, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக வலைவீசுகிறது' என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது: பாஜக தலைவர் ஒருவரிடம் இருந்து எனக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. அவரது நான் பாஜகவில் இணைந்தால், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்றும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஷாஜியா இல்மிக்கு வழங்கப்பட்டது போல உயர் பதவி வழங்கப்படும் என்றும் அந்த பாஜக தலைவர் கூறினார்.

  மேலும், அருணாசலப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் செய்ததைப் போல தில்லியிலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரதமர் மோடி விரைவில் அமல்படுத்தவிருக்கிறார் என்று கூறினார். அவரது பெயரை கூற விரும்பவில்லை.
  என்னிடம் பேசியது போல இதர ஆம் ஆத்மி எம்எல்ஏக்களையும் தொடர்பு கொள்ள பாஜக தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் கட்டளையிட்டிருக்கிறது. அத்துடன், காங்கிரஸ் தலைவர் சிலரையும் விலை கொடுத்து வாங்குவதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முயன்று வருகிறார். நானும், அந்த பாஜக தலைவரும் பேசிய உரையாடல் குறித்த விவரங்களை, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைத்துள்ளேன் என்று அல்கா லம்பா கூறியுள்ளார்.

  தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் புதன்கிழமை (ஏப்.26) வெளியாகவிருக்கின்றன. இதில், வாக்குக் கணிப்புகள் கூறுவது போல பாஜக வெற்றி பெற்றால், பெரிய அளவில் போராட்டத்தை தொடங்குவோம் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறிய நிலையில், அல்கா லம்பாவும் பாஜக மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  ஷாஜியா இல்மி சவால்: இதனிடையே, அல்கா லம்பா எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா? என்று ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஷாஜியா இல்மி சவால் விடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "தான் எழுப்பிய குற்றச்சாட்டை, அல்கா லம்பா ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், இன்னொரு அவதூறு வழக்கை சந்திக்க தயாராக இருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  கடந்த 2015-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த ஷாஜியா இல்மிக்கு, பொதுத் துறை நிறுவனமான இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தில் உயர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai