சுடச்சுட

  

  இந்தியாவுடனான உறவுகளைக் கையாள்வதில் நவாஸ் ஷெரீஃபுக்கே முக்கியப் பங்கு: பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்

  By DIN  |   Published on : 26th April 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவுடனான உறவுகளைக் கையாள்வதில் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கே முக்கியப் பங்கு உள்ளது என்று நம் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
  இந்தியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது.
  இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவதை பாகிஸ்தான் ராணுவம் தடுக்கிறதோ என்று நம் நாட்டில் உள்ள வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
  இந்நிலையில், இந்தியாவுடனான உறவுகளைக் கையாள்வதில் நவாஸ் ஷெரீஃபுக்கே முக்கியப் பங்கு உள்ளது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக, தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
  எங்கள் ராணுவமானது உலகிலேயே சிறந்த ராணுவங்களில் ஒன்று என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதேவேளையில் எங்கள் ஜனநாயகமானது கடந்த 8-9 ஆண்டுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
  கொள்கை சார்ந்த விவகாரங்களில் (இந்தியாவுடனான உறவு உள்ளிட்டவை) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அரசு நிர்வாகம்தான் அத்தகைய முடிவுகளை எடுக்குமே தவிர, ராணுவம் அல்ல.
  இந்தியா உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நாடுகளிலும் அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் கருத்துகளும், தகவல்களும் பெறப்படுகின்றன. பாகிஸ்தானிலும் நாங்கள் அதையே செய்கிறோம்.
  அதில் அசாதாரணமானது எதுவும் இல்லை. எங்கள் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுடனான எங்கள் உறவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  எனவே, இந்த விவகாரத்தில் எங்கள் பாதுகாப்பு அமைப்புகளிடம் (ராணுவம்) இருந்து ஏதாவது தகவல் வந்தால் அது இயல்புக்கு மாறானது அல்லது.
  இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமே தவிர, அது வீணாகி விட அனுமதிக்கக் கூடாது.
  இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து இரு நாடுகளும் தப்பிச் செல்ல முடியாது. பேச்சுவார்த்தைக்கு கதவைத் திறந்து வைத்திருக்கும் பொறுப்பு இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு தரப்புக்குமே உண்டு. முடிவே இல்லாத விரோதச் சூழலில் நாம் வாழ முடியாது. இரு நாடுகளுமே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரைவிலோ, சிறிது காலம் கழித்தோ முன்வரும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai