சுடச்சுட

  

  உத்தரப் பிரதேசத்தில் தலைவர்களின் பிறந்ததினம், நினைவுதினங்களையொட்டி இதுவரை விடப்பட்டு வந்த 15 பொதுவிடுமுறைகளை அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்துள்ளது.
  உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அந்த மாநில அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தலைவர்களது பிறந்த தினம், நினைவு தினங்களையொட்டி விடப்பட்ட 15 பொது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தினங்களில், மாணவர்களுக்கு இந்த தலைவர்களின் பெருமைகள் குறித்து விளக்கப்படும்' என்றார்.
  அம்பேத்கரின் 126-ஆவது பிறந்ததின நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியபோது, பொதுவிடுமுறை தினங்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், கல்விகற்கும் காலம் குறைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர், தலைவர்கள் பிறந்த தினம், நினைவுதினங்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு பொது விடுமுறை விடக் கூடாது என்றும், அன்றைய தினங்களில் மாணாக்கர்களுக்கு தலைவர்களது பெருமைகள் குறித்து போதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
  உத்தரப் பிரதேசத்தில் 42 நாள்கள் பொதுவிடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் 17 பொதுவிடுமுறை நாள்கள், தலைவர்களது பிறந்த தினம், நினைவு தினத்தையொட்டி விடப்பட்டவை ஆகும்.
  உத்தரப் பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்த சமாஜவாதி அரசு, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் பிறந்த தினம் (ஏப்.17), மகரிஷி காஷ்யப், மகரிஷி நிஷத்ராஜ் ஜெயந்தி (ஏப்.5), ஹஸ்ரத் அஜ்மீரி கரீப் நவாஜ் உர்ஸ் (ஏப்.26), மஹாராணா பிரதாப் ஜெயந்தி (மே 9) ஆகியோரின் பிறந்த தினத்தை பொது விடுமுறையாக அறிவித்திருந்தது.
  இதேபோல், டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6-ஆம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்திருந்தது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai