சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் தேர்தல்: சோனியாவுடன் சரத் யாதவ் ஆலோசனை

  By DIN  |   Published on : 26th April 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
  தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு தனது வேட்பாளரை அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இதற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியே காரணமாகும்.
  இந்தச் சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்டோருடன் அவர் நடத்திய சந்திப்புகள் அதில் அடங்கும்.
  இதனிடையே, சோனியா காந்தியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது, தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகத் தெரிகிறது.
  எனினும், இது தொடர்பாக சரத் யாதவ் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிககள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளவர்களில் சரத் யாதவின் பெயரும் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.
  முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் தில்லியில் அண்மையில் கூடி விவாதித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai