சுடச்சுட

  

  கேதார்நாத் உயிரியல் சரணாலயப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 26th April 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் வன உயிரியல் சரணாலயப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறப்பதை நெறிப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாகை மாவட்டத்தில் கேதார்நாத் வன உயிரியல் சரணாலயம் அமைந்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள இப்பகுதியில் அரிய வகையிலான தேவதாரு, ஓக் உள்ளிட்ட மரங்களும், அழகிய மலர்ச்செடிகள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவையும் நிறைந்துள்ளன. மேலும், அழிந்து வரும் உயிரினங்களான கஸ்தூரி மான்கள், ஹிமாலயன் தார் எனப்படும் காட்டு ஆடுகள் ஆகியவையும் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
  இந்நிலையில், கேதார்நாத் சிவன் கோயிலுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களில் பெரும்பாலோர் 16 கி.மீ. தூரத்துக்கு மலையேறி அக்கோயிலை அடைவதற்குப் பதிலாக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
  ஹெலிகாப்டர்களால் எழும்பும் ஓசை, புகை உள்ளிட்டவை கேதார்நாத் வன உயிரினச் சரணாலயப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2015-ஆம் ஆண்டில் உத்தரகண்ட் மாநில அரசுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், கேதார்நாத்தில் ஹெலிகாப்டர்கள் பறக்க வேண்டிய உயரம் மற்றும் அவை எழுப்பும் ஒலி ஆகியவற்றை நெறிப்படுத்தும் வகையில் விதிமுறைகளை வகுக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
  எனினும், அந்த உத்தரவுகளைப் பின்பற்றி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர் கவிதா அசோக் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.
  இந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, உத்தரகண்ட் அரசு, தேசிய வன உயிரின வாரியம் உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai