சுடச்சுட

  

  சிறுபான்மை சமூகத்தினருக்காக உலகத் தரத்தில் 5 கல்வி நிறுவனங்கள்

  By DIN  |   Published on : 26th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mukhtarabbasnaqvi

  சிறுபான்மை சமூகத்தினருக்காக உலகத் தரத்தில் 5 கல்வி நிறுவனங்களை மத்திய அரசு அடுத்த ஆண்டு தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
  மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று அடுத்த மாதத்துடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் நடைபெற்ற கருத்தரங்கில் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:
  3 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் உள்ள கடைசி குடிமகனும் பயனுடையும் வகையில் மத்திய அரசு நேர்மையுடன் பணியாற்றியுள்ளது. இதனால், பிற தரப்பினருக்கு இணையாக, சிறுபான்மையினரும் பயனடைந்துள்ளனர்.
  அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மத்திய அரசின் உறுதிக்கு எதிரான எந்த அராஜக சதியையும் மத்தியில் உள்ள பாஜக அரசும், உத்தரப் பிரதேச பாஜக அரசும் அனுமதிக்காது.
  சிறுபான்மையினர் சமூகத்தினரை பொதுநீரோட்டத்துக்கு கொண்டு வருவதற்கு கல்வி மிகவும் முக்கியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, எனது அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிறுபான்மை சமூகத்தினர் இடையே கல்வியறிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு, உலகத் தரத்திலான 5 கல்வி நிறுவனங்கள், ஆசிரியர், உணவு, கழிப்பறை ஆகிய வசதிகளை உள்ளடக்கிய டி-3 திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. மேற்கண்ட 5 கல்வி நிறுவனங்களையும் மத்திய அரசு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. அந்தக் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
  மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு மத்திய அரசு நிகழ் நிதியாண்டில் ரூ.4,195 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில் 70 சதவீத நிதி சிறுபான்மையினர் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
  நிகழ் நிதியாண்டில் 35 லட்சம் மாணவர்களுக்கு சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் கல்வி உதவித் தொகை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 20-க்கும் அதிகமான எண்ணிக்கையில் குருகுல பள்ளிகளை அமைப்பதற்கும் எனது அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai