சுடச்சுட

  
  rajnathsing

  நக்ஸல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 25 பேரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

  நக்ஸல் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய உத்தி உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.
  சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல்கள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் துணை ராணுவத்தினரான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 25 பேர் உயிரிழந்தனர்.
  வீரமரணம் அடைந்த அவர்களின் உடல்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
  சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ராஜ்நாத் சிங் வந்தார். வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
  பின்னர், மாநில முதல்வர் ரமண் சிங், உயரதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதுதான் நக்ஸல் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி உள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நக்ஸல்கள் எதிராக உள்ளனர். பழங்குடியினரையும் அவர்கள் கேடயமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
  வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது என்பதால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இத்தகைய கோழைத்தனமான தாக்குதலை நக்ஸல்கள் முன்னெடுத்துள்ளனர்.
  தில்லியில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ள உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் நக்ஸல்களுக்கு எதிரான உத்தி மறுஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் அது மாற்றியமைக்கப்படும்.
  இந்தத் தாக்குதலை நாங்கள் சவாலாக எடுத்துக் கொள்கிறோம். வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது. இடதுசாரி (நக்ஸல்) தீவிரவாதத்தை வேரோடு அழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
  இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மாநில முதல்வர் ரமண் சிங், 'இனிவரும் நாள்களில் நக்ஸல் தீவிரவாதிகளை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
  சத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டண்டன், முதல்வர் ரமண் சிங், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ஆகியோரும் சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களையும் மருத்துவமனைக்குச் சென்று ராஜ்நாத் சிங் பார்த்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai