சுடச்சுட

  

  ப.சிதம்பரத்தின் உறவினர் மீதான ஹோட்டல் அபகரிப்பு புகார்: சிபிஐ-க்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 26th April 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் மீதான புகார் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி சிபிஐ அமைப்புக்கு தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
  மருத்துவர் கே.கதிர்வேல் என்பவர் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து திருப்பூரில் 'கம்ஃபர்ட் இன்' என்னும் ஹோட்டலை கடந்த 2007-ஆம் ஆண்டு நடத்தி வந்தார். இந்நிலையில், ப.சிதம்பரத்தின் உறவினர் பத்மினி என்பவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளின் துணையுடன் தனது ஹோட்டலைக் கைப்பற்றிவிட்டதாக கதிர்வேல் புகார் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக சிபிஐ அமைப்புக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் புகார் தெரிவித்ததாகவும், எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
  முன்னதாக, கதிர்வேல் சிபிஐ இயக்குநருக்கு அனுப்பிய புகாரில் தெரிவித்திருந்ததாவது:
  ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சகோதரி பத்மினி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளின் துணையுடன் எனது ஹோட்டலைக் கைப்பற்றிவிட்டார்.
  'கம்ஃபர்ட் இன்' ஹோட்டலின் மதிப்பு ரூ. 10 கோடிக்கு மேல் இருக்கும். எனினும், அதன்பேரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 2.5 கோடி கடன் நிலுவையில் இருந்தது. பின்னர், இதை செயல்படாத சொத்து என்று வங்கி நிர்வாகம் அறிவித்தது. மேலும், ஹோட்டலை ஏலத்துக்கு விடப்போவதாகவும் வங்கி அறிவித்தது.
  இதையடுத்து ஏலத்தை தடுத்து நிறுத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தையும், கடன்தொகை மீட்பு தீர்ப்பாயத்தையும் அணுகினேன். பின்னர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 64 லட்சம் செலுத்தினேன். இதையடுத்து, ஏலம் ரத்து செய்யப்படும் என அந்த வங்கி உறுதியளித்தது. எனினும், இதற்குமாறாக ஹோட்டல் ஏலம்விடப்பட்டது. இதில் பங்கேற்ற பத்மினி ரூ. 4.5 கோடிக்கு ஹோட்டலை ஏலம் எடுத்தார்.
  இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ அமைப்பின் தமிழகப் பிரிவுக்கு புகார் தெரிவித்தேன். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து தங்களுக்கு (சிபிஐ இயக்குநருக்கு) புகார் தெரிவித்துள்ளேன் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கதிர்வேல் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஆர்.கே.கௌபா, இந்த புகார் தொடர்பாக சிபிஐ வரும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்தார். மேலும், புகார் மீது சிபிஐ இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
  சிபிஐ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜ்தீபா பெஹுரா, நீதிபதி பிறப்பித்த நோட்டீஸை ஏற்றுக் கொள்வதாகவும், புகார் தொடர்பாக உரிய பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai