சுடச்சுட

  

  மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன்

  By DIN  |   Published on : 26th April 2017 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PRAGYA

  மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் துறவி சாத்வி பிரக்யாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
  மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 80 பேர் காயமடைந்தனர்.
  இதுதொடர்பான வழக்கில் சாத்வி பிரக்யா, பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 11 பேர் அதே ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  பின்னர், சாத்வி பிரக்யா ஜாமீன் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தார். எனினும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  9 ஆண்டுகளுக்குப் பிறகு: இந்நிலையில், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் வழங்குவதாக மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடர்பான உத்தரவில் நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் ஷாலின் பன்சால்கர் ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது:
  சாத்வி பிரக்யாவுக்கு ரூ. 5 லட்சத்துக்கான பிணையின்பேரில் ஜாமீன் வழங்கப்படுகிறது. சாத்வி பிரக்யா தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். சாட்சியங்களை கலைக்க முற்படக்கூடாது. தேவைப்படும்போது, தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும். ஜாமீன் கோரி பிரசாத் புரோஹித் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
  சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து அவரது குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவரது உறவினர் பகவான் ஜா தெரிவிக்கையில், 'இறுதியாக எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. போதுமான ஆதாரமின்றி, கடந்த 9 ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலையை நாடு முழுவதும் கொண்டாட உள்ளோம்' என்றார் அவர்.
  எதிர்ப்பு: இதனிடையே சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதற்கு, மாலேகான் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  இந்த ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், இதுதொடர்பான உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai