சுடச்சுட

  

  விவசாயத் துறை வருமானத்தின் மீதும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும்: நீதி ஆயோக் அமைப்பு யோசனை

  By DIN  |   Published on : 26th April 2017 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயத் துறையில் கிடைக்கும் வருமானத்தின் மீதும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய கொள்கைக்குழு எனப்படும் நீதி ஆயோக் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
  விவசாயத் துறை வருமானங்கள் மீது வருமான வரி விதிக்கப்படக் கூடாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துவரும்போது, நீதி ஆயோக் அமைப்பு இவ்வாறு முரண்பாடாக கருத்து வெளியிட்டுள்ளது.
  இதுதொடர்பாக, வரி விதிப்பை விரிவுபடுத்துவது தொடர்பான 3 ஆண்டு செயல் திட்ட வரைவு மீது நீதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேவ்ராய் பேசியதாவது:
  நாட்டில் சுமார் 22.50 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள், கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் யாரும் வருமான வரி வளையத்தில் இல்லை.
  நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 3 கோடி குடும்பங்களே வருமான வரி வளையத்துக்குள் வருகின்றனர். அதில் பாதி பேர், வருமான வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் வருகின்றனர்.
  வருமான வரி ஏய்ப்பை கையாளும் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, வருமான வரி விதிப்புத் தொடர்பாக நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையே கடைப்பிடிக்கும் வித்தியாசத்தை நீக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும். வருமான வரி வளையத்துக்குள் விவசாயம் கொண்டு வரப்படவில்லை. இந்த துறையும், தனிநபர் வருமான வரி விதிக்கப்படும் துறை போன்றுதான். ஆதலால், விவசாயத் துறை வருமானத்தின் மீதும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்றார் தேவ்ராய்.
  அதேநேரத்தில், விவசாயத் துறை வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிகள் தொடர்பாக விரிவாக விளக்கத்தை தேவ்ராய் அளிக்கவில்லை. நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான அரவிந்த் பனகாரியாவும், தேவ்ராய் யோசனை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, விவசாயத் துறை வருமானத்தின் மீது வருமான வரி விதிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai