சுடச்சுட

  

  2ஜி அலைக்கற்றை வழக்கு: ஜூலை 15ல் தீர்ப்பு - ஓ.பி.சைனி அறிவிப்பு

  By DIN  |   Published on : 26th April 2017 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajakanimozhi

  புதுதில்லி: தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

  முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த திமுக.வைச் சேர்ந்த ஆ. ராஜா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததில் நாட்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை, தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதிவாதம் முடிவடைந்துள்ளது.

  2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சிக்கும் கைமாறியது தொடர்பான வழக்கும் இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

  இந்த வழக்குகளில் சிபிஐ சார்பில், கடந்த 2011-ஆம் ஆண்டும், அமலாக்கப்பிரிவு சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதி வாதங்கள் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தன.

  தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராஜா, தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசு விதிமுறைகளை மாற்றி, தகுதி இல்லாத நிறுவனங்களுக்கும் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடுகள் அளித்து பெருமளவு ஊழலில் ஈடுபட்டார்.

  இந்த ஊழல் பணத்தில் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறியதில் ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் திட்டமிட்டே இந்த ஊழலில் ஈடுபட்டனர்.

  இந்த ஊழலை மறைக்க, அவர்கள் போலியான ஆவணங்களை தயாரித்தனர். இவர்கள் குற்றச்செயல் புரிந்தது சந்தேகத்திற்கிடமின்றி 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பு மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டார்.

  இந்த வழக்கு தில்லி சிபிஐ. நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜரான திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தங்கள் கூடுதல் வாதங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டனர்.

  அதன்படி கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு இன்றுடன் கூடுதல் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த 2 வழக்குகளிலும் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில்,  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கலைஞர் தொலைக்காட்சி வழக்குகளில் ஜூலை 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி இன்று அறிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai