சுடச்சுட

  

  அமைச்சர் மணி விவகாரம்: கேரள சட்டப் பேரவை 2-ஆவது நாளாக ஒத்திவைப்பு

  By DIN  |   Published on : 27th April 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி, தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் அமைப்பினருக்கு எதிராக கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து கேரள சட்டப்பேரவை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஒத்திவைக்கப்பட்டது.
  கேரளத்தில் மின் துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான எம்.எம்.மணி (70) இடுக்கி மாவட்ட தேயிலை தோட்டப் பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
  இதையடுத்து, மணியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி தோட்டப் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கேரள சட்டப் பேரவை புதன்கிழமை கூடியபோது மணி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின.
  அப்போது, அமைச்சர் மணி விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருமாறு காங்கிரஸ் உறுப்பினர் வி.டி.சதீசன் நோட்டீஸ் அளித்தார். சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், 'இந்த விவகாரத்தில் அமைச்சர் மணியை எச்சரிக்காமல் ஆளும் அரசு அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது' என்று குற்றம்சாட்டினார்.
  எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுவது போல் அமைச்சர் மணி யாரையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தார்.
  இந்த நிலையில், சதீசன் அளித்த நோட்டீஸை பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் நிராகரித்தார்.
  அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் அவையின் மையப் பகுதியில் திரண்டு நின்று, வழக்கமான அலுவல்களை நடைபெறவிடாமல் அமளியில் ஈடுபட்டனர்.
  அதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
  யெச்சூரிக்கு கடிதம்: இதனிடையே, இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைச்சர் மணியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது.
  மார்க்சிஸ்ட் கண்டனம்: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, அமைச்சர் மணிக்கு எதிராக பல்வேறு உறுப்பினர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
  இதனைத் தொடர்ந்து, கட்சியின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் எம்.எம். மணிக்கு கண்டனம் தெரிவிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai