சுடச்சுட

  

  உ.பி.யில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க 'காவிப் படை'யினருக்கு முழு சுதந்திரம்: மாயாவதி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 27th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mayawati

  உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க காவிப் படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
  உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தேசிய தலைவருமான அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை பேசியபோது, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு, காவி உடையணிந்த நபர்களுக்கு போலீஸாரை அடித்து உதைப்பதற்கும், போலீஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் உரிமம் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
  இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் அதே குற்றச்சாட்டை புதன்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்காகவும் பணிபுரியாமல், மத்தியில் இருக்கும் பாஜக அரசு போன்று, சிறுபிள்ளைத்தனமாக விளம்பரம் தேடிக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
  உத்தரப் பிரதேசத்தில் முந்தைய சமாஜவாதி கட்சியின் ஆட்சியில் ரவுடிகளுக்கும், மாஃபியா கும்பலுக்கும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சுதந்திரம் அளிக்கப்பட்டது போன்று, தற்போது காவிப் படையினருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை மக்கள் தங்களது கைகளில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் அபாயமான சூழல் உருவாகியுள்ளது என்று மாயாவதி கூறினார்.
  உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், பகுஜன் சமாஜ் தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என்று அறிவித்த மாயாவதி, அரசியல் ரீதியிலான சவால்களை எதிர்கொள்வதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai