சுடச்சுட

  

  உள்கட்டமைப்புத் திட்டங்களை துரிதமாக முடிக்க ஒருங்கிணைப்பு அவசியம்

  By DIN  |   Published on : 27th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களை விரைந்து முடிக்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியோடு ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதித் திட்டங்கள் குறித்தும், அவற்றின் செயலாக்கம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  இதுதொடர்பாக மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் உரையாற்றினார். அப்போது மத்திய அரசு அதிகாரிகளுக்கும், நீதி ஆயோக் உறுப்பினர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  பிரதமரின் ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆக்கப்பூர்வமாக பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சாலை அமைப்பதற்கான திறன், கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 130 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. இதுகுறித்து உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
  மேலும், நிகழாண்டில் 4,000 கிலோ மீட்டருக்கு சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத பொருள்களைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டது தொடர்பாகவும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. கரிச் சாம்பல், இரும்பு, தாமிரத் துகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றைக் கொண்டு அச்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளைத் துரிதமாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு அனைவரது ஒருங்கிணைப்பும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
  சாலைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் அவற்றின் தரத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர் மோடி, அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
  நிலப்பரப்பைப் படம் எடுப்பதற்காக அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் உதவியுடன் அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தினார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai