சுடச்சுட

  

  காஷ்மீரில் அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ராணுவம் வேண்டுகோள்

  By DIN  |   Published on : 27th April 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லாவில் ராணுவம் சார்பில் 'ஜெய்ஸ்ன்-இ-பாராமுல்லா' என்ற பெயரில் இளைஞர் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவு நாளான புதன்கிழமையன்று, ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராணுவ படைப்பிரிவின் கமாண்டர் ஜே.எஸ். சாந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
  கடந்த சில மாதங்களாக, பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கையை ராணுவம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
  பயங்கரவாதிகளை நாங்கள் கொல்ல வேண்டியுள்ளது. பயங்கரவாதிகளை மட்டுமே நாங்கள் கொல்வோம். இதுதவிர வேறு யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அப்பாவி மக்களுக்கு கெடுதல் விளைவிக்கும் நோக்கம், ராணுவத்துக்கு இல்லை.
  ஜெய்ஸ்ன்-இ-பாராமுல்லா திருவிழாவில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இது இப்பகுதி மக்கள் அமைதி மற்றும் சிறப்பான வாழ்க்கையை விரும்புகின்றனர் என்பதை காட்டுகிறது. காஷ்மீர் இளைஞர்களை தன்னுடன் இணைத்துச் செல்ல ராணுவம் விரும்புகிறது. ஏனெனில், அவர்கள்தான் இந்த தேசத்தின் எதிர்காலம். இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைவது உறுதிசெய்யப்படாவிட்டால், தேசம் வளர்ச்சியடையாது.
  காஷ்மீரில் தற்போதைய நிலவரம் மோசமாக உள்ளது. இதிலிருந்து காஷ்மீரை மீட்டு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கி நாங்கள் கொண்டு செல்வோம். ஆனால் இது எங்களால் மட்டும் செய்ய முடியாது. காஷ்மீர் மக்களின் கைகளிலேயே அது இருக்கிறது.
  அரசுப் படைகள், பாதுகாப்புப் படைகள், பொது மக்கள் ஆகிய அனைவரும் அமைதியையே விரும்புகின்றனர். காஷ்மீரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று சாந்து கூறினார்.
  சமூகவலைதளத்தில் பயங்கரவாதிகள் தொடர்பான ஏராளமான விடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல், பயங்கரவாத சம்பவங்களும், பாதுகாப்புப் படைகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அண்மைகாலமாக அதிகரித்துள்ளன. இதை கருத்தில் கொண்டே இந்த கருத்தை ஜே.எஸ். சாந்து தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai