சுடச்சுட

  

  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இணையதள சேவைகளை 1 மாத காலத்துக்கு முடக்கி வைக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அப்பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அருகே காவல் சோதனைச் சாவடி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக போலீஸாரைக் கண்டித்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையைச் சமாளிக்க காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் விடுமுறை விடப்பட்டது. இணையதள சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டன.
  இந்நிலையில், விடுமுறை முடிந்து கல்லூரிகள் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்டபோது ஸ்ரீநகரில் உள்ள இருவேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்புப் படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் மூண்டது. இதைத் தொடர்ந்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், சிறிய அளவிலான தடியடி நடத்தியும் போலீஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
  இந்தச் சூழலில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மேலும் அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் இணையதள சேவைகளை குறைந்தது ஒரு மாதமோ அல்லது நிலைமை சீரடையும் வரையோ முடக்கி வைக்குமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai