சுடச்சுட

  
  delhi

  தில்லி மாநகராட்சி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக மாநில தலைவர் மனோஜ் திவாரி, மாநில பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு ஆகியோருக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவிக்கும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

  தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அவற்றை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை 181 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
  272 வார்டுகள்: மூன்று மாநகராட்சிகளின் வரம்புக்கு உள்பட்ட மொத்தம் உள்ள 272 வார்டுகளில் தெற்கு, வடக்கு தில்லி மாநகராட்சிகளின் வரம்புக்கு உள்பட்டு தலா 104 வார்டுகளும், கிழக்கு தில்லி மாநகராட்சி வரம்புக்கு உள்பட்டு 64 வார்டுகளும் உள்ளன. இதில் வடக்கு தில்லியில் சராய் பிபால் வார்டு சமாஜவாதி கட்சி வேட்பாளர், கிழக்கு தில்லி மாநகராட்சி மாஜ்புர் வார்டு சமாஜவாதி கட்சி வேட்பாளர்கள் உயிரிழந்து விட்டதால் அவற்றுக்கான தேர்தல் வரும் மே மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
  இதைத் தொடர்ந்து, கடந்த 23-ஆம் தேதி 270 வார்டுகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 54 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 35 மையங்களில் புதன்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.
  181 வார்டுகளில் வெற்றி: பிற்பகல் 3 மணியளவில் அனைத்து வார்டுகளிலும் வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவடைந்தது. இதில் மொத்தம் உள்ள மூன்று மாநகராட்சிகளில் பாஜக 181 வார்டுகளில் வெற்றி பெற்றது. வடக்கு தில்லியில் 64, தெற்கு தில்லியில் 70, கிழக்கு தில்லியில் 47 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
  கடந்த மாநகராட்சித் தேர்தலில் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் இருந்தது. ஆனால், இம்முறை காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி விட்டு தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 48 வார்டுகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. காங்கிரஸ் கட்சியால் 30 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சுயேச்சை வேட்பாளர்கள், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 11 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
  பிரதமர், அமித் ஷா வாழ்த்து: தில்லி மாநகராட்சிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செலுத்தும் கட்சியாக பாஜக திகழ்கிறது. இந்தத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமது சுட்டுரையில், 'பாஜக மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி பெறச் செய்த தில்லிவாசிகளுக்கு நன்றி. மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அயராது உழைத்த தில்லி பாஜக தொண்டர்களின் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன்' என கூறியுள்ளார்.
  பாஜக அகில இந்தியக் தலைவர் அமித் ஷா கூறுகையில், 'இந்தத் தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். எதிர்மறை அரசியல் நடத்துவோருக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்' என்றார்.
  ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: இந்நிலையில், தில்லி மாநகராட்சிகளில் பாஜக அடைந்த வெற்றிக்கு தேர்தல் ஆணையம் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்த தில்லு முல்லுதான் காரணம் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டினார்.
  இருப்பினும் புதன்கிழமை மாலையில் மூன்று மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்ற பாஜகவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்தார். இது குறித்து அவர் தமது சுட்டுரையில், 'மூன்று மாநகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு வாழ்த்துகள். மாநகராட்சிகளின் நலனுக்காக தில்லி அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்' என குறிப்பிட்டுள்ளார்.
  கொண்டாட்டம் தவிர்ப்பு
  தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதிலும், அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 25 வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மாநகராட்சி வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்க பாஜக முடிவு செய்தது.
  இது குறித்து தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், 'சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் நடைபெற்ற தாக்குதலில் நமது சகோதரர்களான சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், துயரத்தில் நாடே மூழ்கியுள்ள போது, தில்லி வீதிகளில் தேர்தல் வெற்றியைக் கொண்டாட விரும்பவில்லை. மாநகராட்சித் தேர்தல் முடிவுகள், தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீதான மக்களின் வாக்கெடுப்பாகக் கருதப்படும் என ஏற்கெனவே பாஜக கூறியது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஆம் ஆத்மிக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பை தில்லிவாசிகள் வழங்கவில்லை' என்றார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai