சுடச்சுட

  

  நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

  By DIN  |   Published on : 27th April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்து செல்லுமாறு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
  சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் அண்மையில் நிகழ்த்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் புதிய உத்தி கையாளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
  இந்நிலையில், நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடர்பான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷி, சி.ஆர்.பி.எஃப் தலைமை இயக்குநர் (பொறுப்பு) சுதீப் லக்தாக்கியா, உள்துறைப் பாதுகாப்பு ஆலோசகர் கே. விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது; உளவுத் தகவல் சேகரிப்பு வழிமுறையை சீரமைப்பது; நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிவது; அவற்றைக் களைவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
  குறிப்பாக, நக்ஸல்கள் குறித்து தகவல்களை அளிக்கும் பொதுமக்கள் உளவு அமைப்பை மேம்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையை எந்தவிதத் தொய்வும் இல்லாமல் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  மேலும், நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் புதிய உத்தியைக் கையாளுமாறும் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai