சுடச்சுட

  

  நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் திலீப் ராய்க்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

  By DIN  |   Published on : 27th April 2017 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DilipRay

  நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில், முன்னாள் பாஜக அமைச்சர் திலீப் ராய்க்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
  கடந்த 1999-ஆம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியின்போது, நிலக்கரித் துறை இணையமைச்சராக பதவி வகித்தவர் திலீப் ராய். இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரமதியா நிலக்கரி சுரங்கத்தை பாஜக முன்னாள் எம்.பி. பி.கே.அகர்வாலுக்குச் சொந்தமான 'காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ்' நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது.
  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில், மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம், நிலக்கரிச் சுரங்கத் திட்டமிடல் நிறுவனம் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பையும் மீறி, காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்குவதற்கான
  பணிகளை தேர்வுக் குழுவும், திலீப் ராயும் முன்னெடுத்துச் சென்றனர் என்று சிபிஐ தெரிவித்திருந்தது.
  இந்த நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திலீப் ராய், மத்திய நிலக்கரிச் சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளாக இருந்த பிரதீப் குமார் பானர்ஜி, நித்தியானந்த் கெளதம், காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அகர்வாலா, காஸ்ட்ரான் மைனிங் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார்.
  குற்றச் சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த நீதிபதி, அவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்குவதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார்.
  அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தினசரி அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. அதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 11-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
  நீதித் துறை மீது நம்பிக்கை உள்ளது- திலீப் ராய்: இதனிடையே, நீதித் துறை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக திலீப் ராய் கூறினார். இதுதொடர்பாக, புவனேசுவரத்தில் அவர் மேலும் கூறியதாவது:
  எனது 40 ஆண்டு கால பொது வாழ்வில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்காக, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நானே கோரிக்கை விடுத்தேன். நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்த தேர்வுக் குழுவில் நான் உறுப்பினராகவும் இல்லை. நான் மாநில அரசியலுக்குத் திரும்பிய பிறகு, மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் சிபிஐ மூலம் எனக்கு எதிராக வழக்கு தொடுத்தது என்றார் அவர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai