சுடச்சுட

  

  பிஎஸ்எஃப் உணவு தரம் குறித்து குற்றம்சாட்டி மனு: தில்லி உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

  By DIN  |   Published on : 27th April 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி பொது நல மனு தொடுத்த நபரிடம் தில்லி உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
  இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சந்த் ஆர்யா என்பவர் பொது நல மனு தொடுத்திருந்தார். இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி அனு மல்ஹோத்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது மனுதாரர் சார்பில், துணை ராணுவப் படைகளில் ஒன்றில் அவர் முன்பு பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
  பிஎஸ்எஃப்பில் மோசமான உணவு வழங்கப்படுவது குறித்து அந்தப் படையிலுள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தீர்களா? அதுதொடர்பான புகார் மனுவின் நகலை எங்களிடம் காண்பியுங்கள். இந்த மனுவை நீங்கள் தொடுத்ததற்கு தேச நலன் காரணமா? பொது நலன் காரணமா அல்லது உங்களது நலன் காரணமா? என்றனர்.
  அப்போது மனுதாரரின் வழக்குரைஞர் அபிஷேக் குமார் சௌத்ரி வாதாடும்போது, பிஎஸ்எஃப்பில் மோசமான உணவு வழங்கப்படுவதாக சமூகவலைதளத்தில் விடியோ மூலம் கருத்து வெளியிட்ட பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவ் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'பொது நல மனு விவகாரத்தில் இதுபோன்ற விவகாரத்தை நீங்கள் எழுப்ப முடியாது' என்றனர். இதைத் தொடர்ந்து, பொது நல மனு மீதான அடுத்த விசாரணையை மே மாதம் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
  பிஎஸ்எஃப்.பில் முன்பு பணியாற்றிய யாதவ், சமூகவலைதளத்தில் கடந்த ஜனவரி மாதம் விடியோ பதிவை வெளியிட்டார். அதில், பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான உணவுகளே அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
  இதை பிஎஸ்எஃப் திட்டவட்டமாக மறுத்தது. எனினும், யாதவ் அண்மையில் அவரது பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai