சுடச்சுட

  

  முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

  By DIN  |   Published on : 27th April 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி நடத்த வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக அரசு விரிவாக பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி நடத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
  இந்த உத்தரவால் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழகம் முழுவதும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு மருத்துவர்கள் பலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை நடைபெற்றது.
  அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் பி.வில்சன், கே.எம்.விஜயன் ஆகியோர் ஆஜராகி விரிவாக வாதிட்டனர். அதேபோன்று, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் வி.பி.ராமன், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
  மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர் வாதம்: இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாகவும் வழங்கப்பட்டுள்ளது.
  மாநில அரசுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக 50 சதவீதம் அதாவது 25 சதவீதம் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தற்போது, தமிழக அரசின் விளக்க குறிப்பேட்டின்படி சாதாரண கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மதிப்பெண்ணும், மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்களும் போனஸ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இதன்படி ஒருவருக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும்.
  ஆனால், உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் பிரிவு 9(4)-ஐப் பின்பற்றி இந்தக் கல்வியாண்டில் 'நீட்' மதிப்பெண்களோடு 30 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள்படி நடத்த வேண்டும். தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
  முதுநிலை மருத்துவ சேர்க்கையில் மாநிலங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டின்படி அந்தந்த மாநிலங்களே இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என விதிகள் உள்ளதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.
  மேலும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி மலை மற்றும் தொலைதூர பகுதிகளில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே போனஸ் மதிப்பெண் வழங்க முடியுமே தவிர, இதர கிராமப்புறங்களில் பணி புரிபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க இயலாது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
  மேலும், இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
  இதைத் தொடர்ந்து, இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலும், தமிழக அரசும் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai