சுடச்சுட

    

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளில் அனைத்து குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்களும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை நிறைவடைந்தன.
    இது தொடர்பான மூன்று வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு, புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றின் தரப்பு வாதங்கள் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.
    இதையடுத்து, சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்த உத்தரவு வருமாறு: ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட பல தொகுப்புகளாக இந்த வழக்கின் ஆவணங்கள் உள்ளன. அவை தொடர்புடைய வாதங்களைப் படித்துப் பார்த்து விட்டு அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் மீண்டும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், புலனாய்வு அமைப்புகளை அழைத்து விளக்கம் கேட்கிறேன். அதற்கு ஏதுவாக இந்த வழக்கை வரும் ஜூலை 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அதற்கு மத்தியில் ஏதேனும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய விரும்பினால் எழுத்துப்பூர்வமாக அந்தத் தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய குற்றம்சாட்டப்பட்டோருக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் அனுமதி அளிக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.
    மூன்று வழக்குகள்: 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக மொத்தம் இரண்டு வழக்குகளை சிபிஐயும், ஒரு வழக்கை மத்திய அமலாக்கத் துறையும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடுத்துள்ளன. இதில் முதலாவது வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும் ஸ்வானி டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்துள்ளது.
    154 சாட்சிகள்: இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டது.
    இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏஜி தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.
    இரண்டாவது வழக்கில் எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும் அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    அமலாக்கத் துறை வழக்கு: மூன்றாவதாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும் ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai