உத்தரப்பிரதேசத்தில் 15 விடுமுறை நாட்கள் ரத்து: யோகி ஆதித்யநாத் சொல்வது என்ன?

உத்தரப் பிரதேசத்தில் தலைவர்களின் பிறந்ததினம், நினைவுதினங்களையொட்டி இதுவரை விடப்பட்டு வந்த 15 பொதுவிடுமுறைகளை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 15 விடுமுறை நாட்கள் ரத்து: யோகி ஆதித்யநாத் சொல்வது என்ன?


லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் தலைவர்களின் பிறந்ததினம், நினைவுதினங்களையொட்டி இதுவரை விடப்பட்டு வந்த 15 பொதுவிடுமுறைகளை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அந்த மாநில அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தலைவர்களது பிறந்த தினம், நினைவு தினங்களையொட்டி விடப்பட்ட 15 பொது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தினங்களில், மாணவர்களுக்கு இந்த தலைவர்களின் பெருமைகள் குறித்து விளக்கப்படும்' என்றார்.

அம்பேத்கரின் 126-ஆவது பிறந்ததின நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியபோது, பொதுவிடுமுறை தினங்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், கல்விகற்கும் காலம் குறைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர், தலைவர்கள் பிறந்த தினம், நினைவுதினங்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு பொது விடுமுறை விடக் கூடாது என்றும், அன்றைய தினங்களில் மாணாக்கர்களுக்கு தலைவர்களது பெருமைகள் குறித்து போதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 42 நாள்கள் பொதுவிடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் 17 பொதுவிடுமுறை நாள்கள், தலைவர்களது பிறந்த தினம், நினைவு தினத்தையொட்டி விடப்பட்டவை ஆகும்.

உத்தரப் பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்த சமாஜவாதி அரசு, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் பிறந்த தினம் (ஏப்.17), மகரிஷி காஷ்யப், மகரிஷி நிஷத்ராஜ் ஜெயந்தி (ஏப்.5), ஹஸ்ரத் அஜ்மீரி கரீப் நவாஜ் உர்ஸ் (ஏப்.26), மஹாராணா பிரதாப் ஜெயந்தி (மே 9) ஆகியோரின் பிறந்த தினத்தை பொது விடுமுறையாக அறிவித்திருந்தது.

இதேபோல், டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6-ஆம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்திருந்தது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 220 வேலை நாட்களில் இதுபோன்ற விடுமுறைகளால் கல்வி நிறுவனங்கள் செயல்படும் நாட்கள் 120 ஆக சுருங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால், வருங்காலத்தில் பாடம் நடத்த ஒரு நாள் கூட இருக்காது என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு உத்தரப்பிரதேசத்தில் 42 பொது விடுமுறை நாட்கள் உள்ளன. அதில் 17 விடுமுறைகள், முக்கியத் தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு தினமாகவே இருக்கிறது.

அதிலும், பல விடுமுறை நாட்கள், உத்தரப்பிரதேசத்தை ஆண்ட முந்தைய அரசுகள், சில குறிப்பிட்ட சமுதாய, மதத்தைச் சேர்ந்த மக்களைக் கவருவதற்காக அவர்களது தலைவர்களின் பிறந்த, நினைவு தினத்தை விடுமுறை நாளாக அறிவித்ததே அதிகம்.

ரத்து செய்யப்பட்ட விடுமுறை நாட்களின் விவரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com