சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண விருந்தில் அசைவ உணவு பரிமாறப்படாததால் அதிருப்தியடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
  எனினும், திருமணத்துக்கு வந்த வேறு ஒருவரை மணமகள் கரம் பிடித்தார். இந்த ருசிகர சம்பவம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள குலேதி கிராமத்தில் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.
  இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர், வியாழக்கிழமை கூறியதாவது:
  அந்த கிராமத்தில் ரிஸ்வான் என்பவருக்கும், நக்மா என்பவருக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமண விருந்தில் அசைவ உணவு பரிமாறப்படாததால் அதிருப்தி அடைந்த ரிஸ்வான் குடும்பத்தினர், திருமணத்தை நிறுத்தப் போவதாக அறிவித்தனர்.
  இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால்தான் அசைவ விருந்து கொடுக்க முடியவில்லை என்று அவர்களை மணமகள் வீட்டார் சமாதானப்படுத்த முயன்றனர். எனினும், அவர்கள் சமாதானம் அடையவில்லை. அதையடுத்து, உடனடியாக, கிராமப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நீண்டநேர வாக்குவாதத்துக்குப் பிறகும் தீர்வு எட்டப்படவில்லை.
  அந்த நேரத்தில், திருமணத்துக்கு வந்த ஒருவர், நக்மாவை திருமணம் செய்வதாக விருப்பம் தெரிவித்தார். அவரை திருமணம் செய்வதற்கு நக்மாவும் சம்மதம் தெரிவித்தார்.
  அந்தத் திருமணத்துக்கு பஞ்சாயத்து நிர்வாகிகளும் ஒப்புதல் அளிக்கவே, நக்மாவின் திருமணம் நடந்து முடிந்தது என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
  இறைச்சி தட்டுப்பாடு ஏன்?: உத்தரப் பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் (மார்ச்) 13-ம் தேதி பொறுப்பேற்ற பிறகு, சட்ட விரோத இறைச்சிக் கூடங்களுக்குத் தடை விதித்தார். அதன் காரணமாக, கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டு வந்த மாட்டிறைச்சி ரூ.400-க்கும், ரூ.350-க்கு விற்கப்பட்ட வந்த ஆட்டிறைச்சி ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  இதேபோல், கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai