சுடச்சுட

  

  இரட்டை இலை சின்ன விவகார வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க தில்லி காவல் குற்றப் பிரிவு திட்டம்

  By DIN  |   Published on : 28th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இரட்டை இலை சின்னத்தை அதிமுக சசிகலா தரப்புக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்குப் பரிந்துரைப்பது குறித்து தில்லி காவல் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
  இந்த விவகாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நெருங்கிய நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை தில்லி காவல் துறை குற்றப் பிரிவு தனிப் படையினர் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இவர்கள் போலீஸ் காவலில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
  உளவுத் தகவல்: இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மேலும் சில முக்கிய நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாக தில்லி காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
  மத்திய உளவுத் துறை அளித்த துப்பு அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தனிப் படையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  குறிப்பாக, சுகேஷ் சந்திரசேகருடன் மல்லிகார்ஜுனா நடத்திய தொலைபேசி உரையாடல், கட்செவி (வாட்ஸ்அப்), செல்லிடப்பேசி குறுந்தகவல்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு அவற்றின் விவரங்கள் தொழில்நுட்ப ரீதியில் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.
  இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரின் செல்லிடப்பேசி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்லிடப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணினிக் குற்றத் தடுப்புப் பிரிவினர் உதவியுடன் அவற்றில் பதிவாகியுள்ள தகவல்களைச் சேகரித்து வருகிறோம்.
  சில முக்கிய அரசியல் தலைவர்கள், மாநில அரசு உயரதிகாரிகள் ஆகியோரின் உரையாடல்களும் இதில் அடங்கும் என்பதால் சந்தேகத்துக்கு உள்ளானவர்களின் பின்புலம் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
  தனிப் படை சந்தேகம்: இந்த விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் சில அமைச்சர்களும் டி.டி.வி.தினகரன் சார்பில் இடைத்தரகர்கள் மூலம் சுகேஷ் சந்திரசேகருக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். கொச்சி, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். மூன்று மாநிலங்களிலும் உள்ள மத்திய உளவுத் துறையினர் எங்கள் விசாரணைக்கு உதவியாக உள்ளனர்.
  இருப்பினும் தில்லி காவல் துறையில் மாநிலங்களிடையில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கென தில்லி காவல் சட்டத்தில் சில வரம்புகள் உள்ளன. தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிடையே நடைபெற்ற ஹவாலா பரிவர்த்தனை தில்லியை மையமாகக் கொண்டு நடந்துள்ளதால்தான் இந்த வழக்கை தில்லி காவல் துறை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
  இ.டி. விசாரணை: இருப்பினும் வழக்கின் தீவிரம், அதில் தொடர்புடைய நபர்கள், குற்றச்சாட்டின் தன்மை ஆகியவற்றை பார்க்கும் போது இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற அதிகப்படியான மனித வளம் தில்லி காவல் துறைக்கு தேவைப்படும். இது குறித்து தில்லி காவல் துறை மூலம் மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்புவோம். ரூ.1.50 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்து, அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தை மத்திய அமலாக்கத் துறையும் (இ.டி.) விரைவில் விசாரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
  மாநில அல்லது மத்திய அரசு பரிந்துரை மூலமோ நீதிமன்ற உத்தரவின் மூலமோ மட்டும்தான் ஒரு வழக்கை சிபிஐ விசாரிக்க முடியும். தன்னிச்சையாக வழக்கை சிபிஐ விசாரிக்க அதிகாரம் கிடையாது. எனவே, தேர்தல் சின்ன ஊழல் விவகாரம் தொடர்புடைய வழக்கில் மத்திய உள்துறை முடிவு எடுக்கும் வரையிலும் தில்லி காவல் துறை இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் என்றார் உயரதிகாரி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai