சுடச்சுட

  

  காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களை எதிர்கொள்ள பெண் போலீஸ் படை

  By DIN  |   Published on : 28th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு சம்பவங்களை எதிர்கொள்வதற்காக, இந்திய ரிசர்வ் போலீஸ் படையில் புதிதாக அனைத்து மகளிர் காவல் படையினர் உருவாக்கப்படவுள்ளனர்.
  ஜம்மு}காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் முக்கியப் பகுதியான லால் செளக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் படையினரை நோக்கி கல்லூரி மாணவர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். ஏராளமான மாணவிகளும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
  இந்த நிலையில், அங்கு நடைபெறும் கல் வீச்சு சம்பவங்களை எதிர்கொள்வதற்கு ரிசர்வ் போலீஸ் படையில் புதிதாக அனைத்து மகளிர் காவல் படையினர் உருவாக்கப்படவுள்ளனர்.
  தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
  ஜம்மு-காஷ்மீரின் சட்டம்-ஒழுங்கு நிலைமை, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்கான உயர்நிலைக் கூட்டம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும், ஜம்மு}காஷ்மீர் மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
  காஷ்மீருக்கு இதுவரை ரூ.19,000 கோடி: இந்தக் கூட்டத்தில், ஜம்மு}காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளுக்காக, பிரதமர் மோடி அறிவித்திருந்த ரூ.80,000 கோடியில், 25 சதவீதத் தொகை, சுமார் ரூ.19,000 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  இதுதவிர, ஜம்மு}காஷ்மீரில் இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஆள்கள் தேர்வு செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில், இந்திய ரிசர்வ் படையில் புதிதாக 5 படைப் பிரிவுகளுக்கு ஆள்களை சேர்ப்பதற்கு ஜம்மு}காஷ்மீருக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டது.
  5,000 பணியிடங்களுக்கு, இதுவரை 1,40,000 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களில் 40 சதவீதத்தினர், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும், விண்ணப்பித்தவர்களில் 6,000 பேர் பெண்கள் ஆவர். எனவே, ஆயிரம் பேரைக் கொண்டு அனைத்து மகளிர் ரிசர்வ் படையை உருவாக்குவதற்கு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  நாடு முழுவதும் தற்போது 144 ரிசர்வ் போலீஸ் படைகள் உள்ளன. இதுதவிர, தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தலா 4 படைப் பிரிவுகளும், நக்ஸல்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தலா 12 படைப் பிரிவுகளும், ஜம்மு}காஷ்மீரில் 5 படைப் பிரிவுகளும் கூடுதலாக சேர்க்கப்படவுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai