சுடச்சுட

  

  சட்லஜ்-யமுனை பிரச்னை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே சுமுக பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதுதான் என்றபோதிலும், நீதிமன்றத்தின் மாண்புக்கும், உத்தரவுக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுமுக பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் அவகாசம் அளிக்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இத்தகைய கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  பஞ்சாபுக்கும், அதன் அண்டை மாநிலமான ஹரியாணாவுக்கும் இடையே நதிநீர்ப் பகிர்வை உறுதி செய்வதற்காக சட்லஜ்-யமுனை கால்வாய் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பஞ்சாப் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
  இந்த விவகாரத்தை நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த போதிலும், இரு மாநிலங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கோரியது. இதனால், வழக்கு விசாரணை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுக்கப்படவில்லை.
  இந்நிலையில் இந்த விவகாரம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் ரஞ்சித் குமார் வாதாடியதாவது:
  பஞ்சாப் மற்றும் ஹரியாணா முதல்வர்கள் பிரதமர் முன்னிலையில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் இந்த விவகாரத்துக்குத் தீர்வு எட்டப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
  இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், 'பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது ஏற்புடைய ஒன்றுதான். அதேவேளையில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
  இதனிடையே, அடுத்த மாதம் 27-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி பி.சி.கோஷ், தனது பதவிக் காலத்தில் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்க இயலாததற்கு வருந்துவதாகத் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai