சுடச்சுட

  

  ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் கூட்டத்தில் சிலர் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதால் பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்கு கண்ணையா குமார் உள்பட 30 மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு தில்லி காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
  இது தொடர்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
  தேசத் துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவர் சங்கத் தலைவர் கண்ணைய்யா, அச்சங்கத்தைச் சேர்ந்த குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்ட 30 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27, 28, 29 ஆகிய நாள்களில் பல்கலை.யின் நிர்வாகக் கட்டட வளாகத்தில் உள்ள அரங்கில் நண்பகலுக்குப் பிறகு அவர்கள் ஆஜராகலாம் என அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
  ஜேஎன்யு தேசத் துரோக வழக்கு தொடர்பாக அந்தப் பல்கலை. மாணவர்கள் சங்கத் தலைவர்களான கன்னையா, உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த ஆண்டு பிணை வழங்கியது. இந்தப் பிணை கடந்த செப்டம்பர் மாதம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்புடைய வழக்கை விரைந்து விசாரிக்குமாறும், மூன்று நாள்களுக்குள் சாட்சியங்கள் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இந்த விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிகை வரைவு கடந்த ஜனவரியில் தயாரிக்கப்பட்டு தில்லி காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டது. தேசத் துரோக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமானால், தில்லி துணைநிலை ஆளுநரின் முன் அனுமதியை காவல் துறை பெறுவது அவசியமாகும்.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிகை வரைவு அறிக்கையில் உமர் காலித்துக்கும், அனிர்பான் பட்டாச்சார்யாவுக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், தேசத்துக்கு எதிராக முழக்கமிட்ட 9 பேரை காவல் துறை கண்டறிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai